Wednesday, November 11, 2009

சாதனை
சென்ற வாரம் சென்னை அரசு பொது மருத்துவமனையில் மூளை மரணம் ஏற்பட்டவரின் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு அவரது சிறுநீரகங்கள் இருவருக்கும் - ஒன்று அரசு பொது மருத்துவமனை பிணியாளர் ஒருவருக்கும் மற்றொன்று ஸ்டான்லி (இசுடானுலி) மருத்துவமனை பிணியாளர் ஒருவருக்கும்- பொருத்தப்பட்டு இரண்டு சிறுநீரகங்களும் நன்றாக இயங்கி வருகின்றன. கண்கள் இரண்டும் எழும்பூர் கண் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இருவருக்கு பார்வையும் இருவருக்கு மறுவாழ்வும் கிடைத்திருக்கின்றன

சென்ற வருடம் அப்போலோ மருத்துவமனையில் இருந்து ஹிதேந்திரனின் இதயம் பெறப்பட்டு மற்றொருவருக்கு பொருத்தப்பட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அதே போல் இந்த முறை அரசு மருத்துவமனையிலிருந்து பெறப்பட்டு அரசு பொது மருத்துவமனைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை அரசு பொது மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி கரமாக நடந்து முடிந்து விட்டது. ஸ்டான்லி (இசுடானுலி) மருத்துவமனையில் மூன்று பேருக்கு கல்லீரல்மாற்று மருத்துவ சிகிச்சை நடந்து முடிந்து விட்டது

இந்தியாவிலேயே மாநில அரசு மருத்துவமனைகளில் முற்றிலும் இலவசமாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை எல்லாம் நடப்பது தமிழகத்தில் தான்

தமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகள் இந்தியாவின் பிற மாநிலங்களை விட பல மடங்கு உயர்ந்திருப்பது நாம் அறிந்ததே. இப்பொழுது சிறப்பு சிகிச்சை அளிப்பதிலும், நாம் பிற மாநிலங்களை விட பல மடங்கு முன்னேறி வருகிறோம்

No comments:

Post a Comment