Wednesday, December 9, 2009

சென்னை : உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பாக ஆலோசனை நடத்த முதல்வர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் 2010ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாநாட்டினை சிறப்பாகவும், சீரிய முறையிலும் நடத்த தமிழக அரசு திட்டமிட்டு, ஆணையிட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே மாநாட்டு தலைமைக் குழு, ஆய்வரங்க அமைப்பு குழு, சிறப்பு மலர் குழு என்று பல்வேறு குழுக்களை அமைத்து முதல்வர் ஆணையிட்டுள்ளார்.


இந்நிலையில், மாநாட்டினை வெற்றிகரமாக நடத்த பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆலோசனையை பெறும் வகையில் முதல்வர், சட்டசபை கட்சித் தலைவர்களிடம் ஒத்துழைப்பு தருமாறு கோரி, கடிதம் அனுப்பினார். அதன் அடிப்படையில் பதில் தெரிவித்துள்ள சட்டசபை கட்சித் தலைவர்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு தற்போது அறிவிக்கப் பட்டுள்ளது. குழுவின் விவரம்: ஆலோசனை குழு தலைவர் முதல்வர் கருணாநிதி, உறுப்பினர்கள்: நிதியமைச்சர் அன்பழகன், சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பன், தமிழக காங்., தலைவர் தங்கபாலு, திராவிடர் கழக வீரமணி, எம்.ஜி.ஆர்., கழகம் இராம வீரப்பன், பாட்டாளி மக்கள் கட்சி கோ.க.மணி, மா.கம்யூ., என். வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் சிவபுண்ணியம், பாரதிய ஜனதா கட்சி இல.கணேசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஸ்ரீதர் வாண்டையார், புரட்சி பாரதம் பூவை ஜெகன் மூர்த்தி, கொங்கு முன்னேற்றக் கழகம் பெஸ்ட் ராமசாமி, தலைமைச் செயலர் ஸ்ரீபதி மற்றும் அமைப்பாளர் அலாவுதீன் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். தமிழ் செம்மொழியாக அறிவித்த பிறகு நடைபெறுகின்ற உலக அளவிலான முதல் மாநாடு என்பதால், இதை மிகச் சிறப்பாக நடத்த இந்த ஆலோசனை குழு அமைக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment